Powered By Blogger

சனி, 8 செப்டம்பர், 2018

அச்சமின்றி திரி


நாலுசுவர் என்பது சிறைச்சாலை வெளியே வா
நடுரோடும் பாடசாலை
மனிதர்கள் உலவும்பாடங்கள்

பேசாமலே வளரும்பகைமை
பேச்சினால் உடைப்போம் சுவரை

சிகை பகை 
அடிக்கடி சரிசெய்

தன்னை நம்பாமல்
தன்னை நம்புபவனை
நம்பாது கடவுள்

தொலைவில் புள்ளியாய் தெரியும்
ஒற்றை வெளிச்சம் அருகே செல்லச்செல்ல ஓங்கிவளரும்

தொலைவை குறைத்துவிடு
துயரம் தொலைத்துவிடு

விடாமல் பெய்கிற 
அடைமழை -முயற்சி

அடர்ந்த காட்டில் உலவும்
கொடிய மிருகங்கள்கண்டதுண்டா  
அவைமனதில்  உலவும்
கெட்டகுணங்களின் 
உயிர்வடிவங்கள்

தீய பழக்கங்களைக் கொன்றுவிடு
இன்றேல்  அவைஉன்னை தின்றுவிடும்

போதைக்கு முதல் பலி 
மரியாதை - உன்னை நீயே சிறுமைப்படுத்த ஊற்றிக்குடி

தனிமை உன்னை
தனிமைப்படுத்தி விடும்
கூடுமானவரை கூடிப்பழகு

காட்டுவெள்ளமும்
உணர்ச்சி வெள்ளமும்
பாதுகாப்பானவை அல்ல

நெற்றியில் நீர் வெகுமானம்
கண்களில் நீர் அவமானம்

வண்டியைவிட   சைக்கிளை நம்பு
சைக்கிளைவிட  கால்களை நம்பு

காற்றுக்கு சிறகுகள் தேவையில்லை
அறிவுக்கு அறிவுரைதேவையில்லை

காலை எழுந்தவுடன் தண்ணீரில் குளி
மாலை வரும்வரை வேர்வையில் குளி

ஊமையை பேசவைக்க வேண்டாம்
சிந்திக்க வைத்தாலே போதும்

முடிந்தவரை உண்மைபேசு 
முடியாதபொழுதில் ஊமையாகு

யாரும் இங்கே நல்லவனில்லை
அதனால் நீயும் கெட்டவனில்லை

அடிக்கடி உன்னைநீயே
ஆராய்ந்துகொள்

நீ எனும் நீரில் எத்தனை கிருமிகள்
உன் ஆய்வுக்கூடம் அறிந்து சொல்லட்டும் 
ஆகாதவை அகற்ற மருந்து கொள்ளட்டும்

இறகுகள் உதிர்வதால்பறவைக்கு சேதமில்லை
இழப்புகள் நேர்வதால்உழைப்புக்கும் ஊனமில்லை

அடக்கம் கீழிருந்து மேல்
ஆணவம் மேலிருந்து கீழ்

மேடை கிடைத்தால் பேசு
பேனா கிடைத்தால் எழுது
புத்தகம் கிடைத்தால் வாசி
மெத்தை கிடைத்தால் தூங்காதே

அடுத்த  கணமே 
அழியும் உலகம் என்றாலும் 
அச்சமின்றி திரி
ஆலையில் பிழியப்படும்
கரும்பும் உழைப்பும் 
கலந்தே இனிக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக