Powered By Blogger

செவ்வாய், 17 நவம்பர், 2020

அய்யா இரட்டைமலை சீனிவாசன்!

 

சாதிப் பாம்பு சுற்றிக் கிடந்த

சமுதாயம்

அனைவருக்கும் இருக்கவில்லை

சம நியாயம்


கீழென்றும் மேலென்றும்

சொல்லி வைத்தான்

தொட்டாலும் தீட்டென்று

தள்ளி வைத்தான்.


பொதுத்தெருவில் நடமாட

பொதுக் கிணற்றில் நீரெடுக்க

ஒடுக்கப்பட்டு ஒரு மக்கள்

தடுக்கப்பட


அப்போது ஒரு தலைவன்

வந்துதித்தான்

தீண்டாமை பெருங்கேட்டைச்

சுட்டெரித்தான்


வான்பொழிந்த நீரெடுக்க

எவர் தர வேண்டும் அனுமதி

பூ நிலத்தில் நாம் நடக்க

எவரிடம் பெற வேண்டும் அனுமதி


சட்டமன்றம் கதிகலங்க

தமிழ்த்தலைவன் இடிமுழங்க

யாவரும் எங்கும் செல்லலாம்

எவரும் எங்கும் நீர் அள்ளலாம்


ஆட்சிமன்றம் ஏற்றது அவன் 

தீர்மானம்

மானுடத்தை காத்தது அவன்

தன்மானம்.


லண்டன் வட்டமேசை மாநாட்டில்

அம்பேத்கருடன் ஒலித்த

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல்


தமிழ் நிலத்தில் களை களைய

சமுதாய சீர்திருத்த

விதைவிதைத்த முதற்குரல்


தனிமனித புரட்சியின் 

தன்னிகரில்லா அடையாளம்

இழிவுச்சொல்லை 

எழுச்சிச் சொல்லாய் 

மாற்றிக் காட்டிய இனமானம்!



தாயே தமிழ் நாடே

 
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே
முக்கடல் கூடி சங்கமித்து
முப்பொழுதும் உனைத்
தொழுதிடுமே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே

காவிரி வைகை நொய்யலென
தாமிரபரணி பவானியென
தென்பெண்ணை அமராவதியாக
நதியாரங்கள் மின்னும் ஒளிநாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரும்
கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரும்
உயிர்ச்சூழல் காத்து உயர்ந்து நிற்கும்
இயற்கை போர்த்திய எழில் நாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே

பச்சை வயலின் பயிர் செழிப்பில்
காலை வெயிலின் நாட்டியங்கள்
ஒளிக்கீற்றாய் மோதி விளையாடும்
பொன்னெழில் பூத்த வளநாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே

தொழிற்சாலை சுழலும் சக்கரங்கள்
ஒலிதானே உழைப்பின் மந்திரங்கள்
ஒலிக்கும் தினமும் உனைப் போற்றி
உழைக்கும் கரங்கள் தனைக் கூட்டி
பொருளாதாரத் தரு நாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே

சேரனும் சோழனும் பாண்டியனும்
வீரத்தை விளைத்த பெருநிலமே
கடையெழு வள்ளல்கள் கொடைகொடுத்து
வாரிக் குவித்த புகழ் நிலமே
வீரமும் ஈகமும் உயர் நாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே

இலக்கிய நயங்கள் தேனூறும்
உலகியல் நெறிகள் வானேறும்
சிறப்புகள் மிகுந்த மொழியாகும்
பைந்தமிழ் துளிர்த்த நிலமாகும்
செந்தமிழ் தேன்மொழி திகழ் நாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே

பாரில் புகழ் நாடே
நேசம் சுழல் நாடே
ஓங்குக நின்புகழ் உயர்வோடே
வாழிய செந்தமிழ் திருநாடே!



வாழ்வாங்கு வாழ்ந்த வ.உ.சி

 

ஓட்டப்பிடாரம் பிறந்த

தமிழ் நிலத்தின் பெருமகன்


வலுவிழந்த மக்களுக்காக

வழக்கு மன்றம் அதிர அதிர

வாதாடிய சட்ட நாயகன்


உள்ள சொத்தையெல்லாம்

இல்லாதவருக்கு 

அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு

இறைவனான மாமனிதன்


துன்பத்தில் துடித்த தொழிலாளர் 

துயர் துடைக்க 

தமிழகத்திலேயே ஏன்

இந்தியாவிலேயே

முதல் தொழிலாளர் போராட்டம்

முன்னெடுத்து வென்றெடுத்த

உரிமை காத்த மாவீரன்.


பாட்டுக்கு ஒரு பாரதி எனில்

பேச்சுக்கு ஒரு வ.உ.சி என

செத்த பிணம் பிழைத்து எழ

பெருந்தமிழாய் முழங்கியவன்.


தாய்த் தமிழைப் 

போற்றி வளர்த்த

தன்னிகரில்லா தமிழறிஞனே


தொல்காப்பியத்தை

திருவள்ளுவத்தை

பதிப்பித்து புதுப்பித்த 

செழுந்தமிழ் சேவகனே


பாடற்றிரட்டு எனும் 

தமிழிலக்கிய தேன் சிந்தும்

கவிதை பாடிய மகா கவிஞனே


எத்தனை நூல்கள் யாத்தளித்தாய்

அத்தனை நூலிலும்

தமிழ்த் தேன் வடித்தாய்!


தமிழகம் கண்ட

தற்சார்பு பொருளதாரத்தின்

தந்தை

உலகாண்ட வெள்ளையனும்

கண்டு மிரண்ட சிந்தை

முடியாது என நினைத்ததை

முடித்துக் காட்டிய விந்தை


கப்பலோட்டிய பெருந்தமிழனே

வீரவணக்கம்!


மாடு இழுக்க மறுத்த செக்கையும்

தான் இழுத்து சிலிர்த்த சிங்கமே

விடுதலை வேட்கையின்

வெப்பம் கூட்டிய

தெற்கிலிருந்து எழுந்த பெருந்தீயே!


அணையாது எரியும் 

ஒவ்வொரு தமிழனின் நெஞ்சினிலும்

ஆற்றலோடு நீ ஏற்றிய

அறிவுச் சுடர்!
















புதன், 8 ஏப்ரல், 2020

மரம்


மரம் 

மனிதகுலத்தின்
மூச்சுக்காற்று - அதன் 
ஒவ்வொரு அசைவும்
ஆசிர்வாதம்!

வெள்ளி, 17 ஜனவரி, 2020

சென்னை


சென்னை...

அருமை நகரம்
அறிமுகம் தேவையில்லாத நகரம்
சந்திக்கும் அனைவரும்
உறவுகளாக 
அன்பைப் பொழியும் நகரம்.
முதல் நாளே இரும்பாக
இறுகும் நட்பு வாய்க்கும் நகரம்.
இருக்கும் 
உணவை பணத்தை
உடையை உரிமையோடு 
இனிதே பகிரும்
உணர்வை பரிசளிக்கும் நகரம்
சிறுகூடுகளில் அடைந்து
இருந்தாலும்
பெருவானத்தில் பறக்க
சிறகுகளை பரிசளிக்கும்
கனவு நகரம்!

வா புத்தாண்டே !

வா 
வசந்தங்களோடு வா
சுகந்தங்களோடு வா
நம்பிக்கையோடு 
நோக்கும் கண்களுக்கு
வெளிச்சங்களோடு 
வா புத்தாண்டே !
கனவுகள் கைசேரும்
இலக்குகள் கிழக்காகும்
இனிய விடியலே வா !

இயற்கை போற்றுதும் !

தூவிய விதைகளை
விசிறிப் பரப்பிய 
காற்றே நன்றி

விழுந்த விதைகளை
வாரியணைத்த
உழவன் கீறிய 
நிலமே நன்றி

ஊனிய விதைகளை
ஊக்கி வளர்த்த
அமுதம் வார்த்த
நீரே நன்றி

உயிராய் உணவாய்
ஊட்டம் தந்து
பயிராய் விளைத்த
கதிரே நன்றி

நன்றிப் பொங்கல்
உழவன் நெஞ்சில்
நெல்மணி குவித்த
உற்சாகத்தில்

இயற்கை போற்றும்
தமிழன் நாட்டில்
இன்பப் பொங்கல்
கொண்டாட்டங்கள் !

குதூகலம்

குலுங்கி குலுங்கி
மண்சாலையில்
மாட்டு வண்டி பயணம்
வேடிக்கை காட்டிக்கிட்டே
அடியடியாக நகரும்
பொங்கல் வந்தா 
பக்கத்தூரு 
பொட்டல்காடே திடலாம்
மாட்டு வண்டி பந்தயம் காண
எட்டுப்பட்டி திரளாம்
ஏ ! ஓ வென்றே குழந்தைகளின்
குதூகலிக்கும் குரலாம்
பஞ்சு மிட்டாய் தின்னுகிட்டே
கத்திக்கூவ வரலாம் !

தமிழன்டா !

சீறி வரும் காளை
தாவி ஏறும் வீரம்
காளையோடு பாயும்
காற்று போல வேகம்
திமில் பிடித்து ஓடும்
திடுக் திடுக் நேரம்
உயிரங்கு‌ துச்சம்
தமிழன்டா
உணர்வங்கு உச்சம் !


இனிக்கும் கரும்பு


ஒடிச்சு கடிச்சாலும்
ஓடாது தித்திப்பு
அரைச்சுப் பிழிஞ்சாலும்
அழியாத தித்திப்பு
காய்ச்சிக் கொதிச்சாலும்
கழியாது தித்திப்பு
உருட்டி எறிஞ்சாலும்
குறையாத தித்திப்பு
உடைச்சு பொடிச்சாலும்
ஒழியாது தித்திப்பு
கரைச்சு குடிச்சாலும்
களையாத தித்திப்பு
பொங்கல் வந்தாச்சு
ஊரெல்லாம் செங்கரும்பு
இனிப்பாய் இனிக்கட்டும்
வாழ்வெல்லாம் இன்றிருந்து !

பாரதி

பாரதி...
சங்கத் தமிழ் 
சற்று கண்ணயர்ந்தபோது
பொங்கி எழுந்த 
புதுயுக கவிஞன் !

வள்ளுவனை வழிமொழிந்த 
மாகவிஞன்!
தெள்ளுதமிழ் தேன்வடித்த
பூங்கவிஞன் !

தேசத்தை நேசித்த 
பெருங்கவிஞன்!
காணி நிலம் யாசித்த
கனல் கவிஞன்!

தாய்த் தமிழை போற்றிட்ட
புகழ்க்கவிஞன்!
பெண்ணுரிமை போரிட்ட
களக்கவிஞன்!

வருணாசிரம கோட்பாட்டின்
எதிரிக்கவிஞன்!
வறுமை உலகைச் சாடிய
புரட்சிக்கவிஞன்!

பாரதி....
புதுமைத் தமிழ்க்
கவிதைத் தேரின்
சாரதி...!