Powered By Blogger

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

போராடு

                     

ஏளனம் என்ன செய்துவிடும் 

காய்ச்சிய இரும்பாய் இதயம் 

அதில் 

ஈ போல் அமரும் 

ஏளனம் என்ன செய்துவிடும் 

 

கனவுகளுக்கு சிறகுகள் பூட்டிவிடு 

முயற்சிஎனும்  சிறகுகள் பூட்டிவிடு 

வெற்றியெனும் வானம் வசப்படும் 

வற்றும்வரை 

நிற்பதே இல்லை ஆறுகள் 

 

சிதறாத கவனமும் 

பதறாத செயலும் 

சிறப்பாக நிறைவுறும் 

 

தோல்விச் சாயங்களில் 

தோய்த்தெடுத்த  முயற்சியே 

வண்ணமயமான வெற்றி 

 

இருந்தாய் இன்றுவரை 

கூட்டுப்புழுவாய் 

இனிநீ  வெடிப்பாய் 

கந்தகக் கிடங்காய் 

 

போராட்டக்கால்கள் இல்லாத 

உயிரினமே உலகில் இல்லை 

ஓடிவா நீயும் இந்த 

                        உலகின் பிள்ளை 


ஊனம் என்பது 

மனதில் உள்ளவரை

எல்லா பாகமும் பக்கவாதம் 

 

 தூண்டில் புழுவுக்கு

ஏங்கும்  மீனா நீ 

இல்லை நீ திமிங்கலம் 

கப்பலையே விழுங்கு 


யார் உனக்கு தடைபோட 

நீ 

நடைபோடும் இடமெலாம் 

இனி உன் தேசம் 


ஐம்புலனுக்குள் அடங்கிவிட 

ஆமையா நீ 

சிறகு விரி கழுகு நீ 


இமைகளை எரித்துவிடு 

இனி தூக்கம் உனக்கில்லை 

இமயத்தினை அடைந்துவிடு 

இனி துக்கம் உனக்கில்லை 


முடங்கிப் போவதற்கா வந்தாய் 

முழங்கிப் போக வந்தவனல்லவா நீ 

வெற்றி முழக்கம் 

கேட்கட்டும் திசையெட்டும் 


தூங்கிய நீதியை தட்டி எழுப்ப 

பேனா குனியலாம் 

நீ குனியலாமா 

நிமிர்ந்து நில்  

தேசத்தை 

தாங்கும் தூணல்லவா நீ 


உன்னை நீயே ஏன் 

உதிர்த்துக் கொள்கிறாய் 

இலையுதிர்காலத்து மரமா நீ 

எதிர்த்து நில் எதிர் காற்றையும் 

 

அறிவுரைக்கு காதுகொடு 

ஆலோசனைகளை வடிகட்டு 

அல்லவை கழியும் 

நல்லவை செரிக்கும் 

நலனே விளையும் 

நம்பிக்கை காக்கும் 

 

கடல்வலையை தூக்கி 

தோளில் போடு 

கவலையை தூக்கி 

கடலில் போடு 


கண்ணீரின் பாசனத்தால் 

எப்பயிரும் எவ்விடத்தும் 

விளைவதில்லை 

வேர்வை பாசனமிடு 


உன்னை முந்திச்  செல்பவனைப்பற்றி 

கவலை கொள்ளாதே 

நீ 

பிந்திவிடாமல் 

பார்த்துக்கொள் 

 

ஒருமுறை செய்வதல்ல 

உடற்பயிற்சி 

முயற்சியும் ஒரு உடற்பயிற்சி 

 

தொட்டுவிடும் தூரந்தான் வானம் 

விரல்கள் நீள  வேண்டும்

கடந்துவிடும் தூரந்தான் கடலும் 

துடுப்புகள் அசைந்திட வேண்டும் 

 

போராடுவோம் நாம் 

போராடும் வரைதான் நாம் 

போராளிகள் நாம்

 

 

 

 

மொழி வாழ்த்து

                            

தேனினும் இனியது எம்மொழியே -உயர் 

வானினும் உயர்ந்தது எம்மொழியே -கடல் 

வீசிடும்  அலையென எம்மொழியே 

ஓயா தொலித்திடும்    செம்மொழியே 


கூடல் நகரில் தமிழ்ச்சங்கம்     கூடி வளர்த்தது எம்மொழியே 

கேடர் மொழிகள்   உட்புகுத்தும் கேடு தகர்த்தது எம்மொழியே 

வாழிய வாழிய எம்மொழியே வாளினும் கூரிய செம்மொழியே 

வாழிய வாழிய எம்மொழியே வாழிய உயர்தனிச் செம்மொழியே !