Powered By Blogger

வெள்ளி, 17 ஜனவரி, 2020

சென்னை


சென்னை...

அருமை நகரம்
அறிமுகம் தேவையில்லாத நகரம்
சந்திக்கும் அனைவரும்
உறவுகளாக 
அன்பைப் பொழியும் நகரம்.
முதல் நாளே இரும்பாக
இறுகும் நட்பு வாய்க்கும் நகரம்.
இருக்கும் 
உணவை பணத்தை
உடையை உரிமையோடு 
இனிதே பகிரும்
உணர்வை பரிசளிக்கும் நகரம்
சிறுகூடுகளில் அடைந்து
இருந்தாலும்
பெருவானத்தில் பறக்க
சிறகுகளை பரிசளிக்கும்
கனவு நகரம்!

வா புத்தாண்டே !

வா 
வசந்தங்களோடு வா
சுகந்தங்களோடு வா
நம்பிக்கையோடு 
நோக்கும் கண்களுக்கு
வெளிச்சங்களோடு 
வா புத்தாண்டே !
கனவுகள் கைசேரும்
இலக்குகள் கிழக்காகும்
இனிய விடியலே வா !

இயற்கை போற்றுதும் !

தூவிய விதைகளை
விசிறிப் பரப்பிய 
காற்றே நன்றி

விழுந்த விதைகளை
வாரியணைத்த
உழவன் கீறிய 
நிலமே நன்றி

ஊனிய விதைகளை
ஊக்கி வளர்த்த
அமுதம் வார்த்த
நீரே நன்றி

உயிராய் உணவாய்
ஊட்டம் தந்து
பயிராய் விளைத்த
கதிரே நன்றி

நன்றிப் பொங்கல்
உழவன் நெஞ்சில்
நெல்மணி குவித்த
உற்சாகத்தில்

இயற்கை போற்றும்
தமிழன் நாட்டில்
இன்பப் பொங்கல்
கொண்டாட்டங்கள் !

குதூகலம்

குலுங்கி குலுங்கி
மண்சாலையில்
மாட்டு வண்டி பயணம்
வேடிக்கை காட்டிக்கிட்டே
அடியடியாக நகரும்
பொங்கல் வந்தா 
பக்கத்தூரு 
பொட்டல்காடே திடலாம்
மாட்டு வண்டி பந்தயம் காண
எட்டுப்பட்டி திரளாம்
ஏ ! ஓ வென்றே குழந்தைகளின்
குதூகலிக்கும் குரலாம்
பஞ்சு மிட்டாய் தின்னுகிட்டே
கத்திக்கூவ வரலாம் !

தமிழன்டா !

சீறி வரும் காளை
தாவி ஏறும் வீரம்
காளையோடு பாயும்
காற்று போல வேகம்
திமில் பிடித்து ஓடும்
திடுக் திடுக் நேரம்
உயிரங்கு‌ துச்சம்
தமிழன்டா
உணர்வங்கு உச்சம் !


இனிக்கும் கரும்பு


ஒடிச்சு கடிச்சாலும்
ஓடாது தித்திப்பு
அரைச்சுப் பிழிஞ்சாலும்
அழியாத தித்திப்பு
காய்ச்சிக் கொதிச்சாலும்
கழியாது தித்திப்பு
உருட்டி எறிஞ்சாலும்
குறையாத தித்திப்பு
உடைச்சு பொடிச்சாலும்
ஒழியாது தித்திப்பு
கரைச்சு குடிச்சாலும்
களையாத தித்திப்பு
பொங்கல் வந்தாச்சு
ஊரெல்லாம் செங்கரும்பு
இனிப்பாய் இனிக்கட்டும்
வாழ்வெல்லாம் இன்றிருந்து !

பாரதி

பாரதி...
சங்கத் தமிழ் 
சற்று கண்ணயர்ந்தபோது
பொங்கி எழுந்த 
புதுயுக கவிஞன் !

வள்ளுவனை வழிமொழிந்த 
மாகவிஞன்!
தெள்ளுதமிழ் தேன்வடித்த
பூங்கவிஞன் !

தேசத்தை நேசித்த 
பெருங்கவிஞன்!
காணி நிலம் யாசித்த
கனல் கவிஞன்!

தாய்த் தமிழை போற்றிட்ட
புகழ்க்கவிஞன்!
பெண்ணுரிமை போரிட்ட
களக்கவிஞன்!

வருணாசிரம கோட்பாட்டின்
எதிரிக்கவிஞன்!
வறுமை உலகைச் சாடிய
புரட்சிக்கவிஞன்!

பாரதி....
புதுமைத் தமிழ்க்
கவிதைத் தேரின்
சாரதி...!