Powered By Blogger

திங்கள், 15 அக்டோபர், 2018

உணவைப் பகிர்ந்துண்போம்



இன்னும் ஒழிக்க முடியவில்லை
உலகில் வறுமையை 
விண்வெளியைக் கோலோச்சும்
விஞ்ஞானம் வளர்ந்த பின்னும்.

குடலோடு ஒட்டிய வயிறு ஒருபிடி
சோற்றுக்காக மூச்சுதிணறும்
உடலைவிட்டு பிரியாமல் உயிரோ
வேதனையை ஊதிப்பெருக்கும்.

இல்லாதவன் கண்ணில்
ஏக்கப்பார்வை
இருப்பவன் கண்ணில்
ஏளனப்பார்வை.

பசி 
ஆயுதப் போருக்கும் வழிவகுக்கும்
ஆயுதமில்லாமலும் போர் தொடுக்கும்.

உலகின் தவிர்க்க முடியாத
அடிப்படைத் தேவை உணவு
உலகின் மிகப்பெரிய 
வியாபாரப் பொருள் உணவு.

ஆதிமனிதனுக்கு பொதுவாக
எளிதாகக் கிடைத்த அனைத்தும்
நாகரீகமனிதன் விலைகொடுத்து வாங்கும்
சந்தைப்பொருளாகி அவனையே
சந்தியில் தள்ளும்.

எல்லாம் இழந்தவன் உணவுக்குக்கூட 
அலைகிறான் அகதியென.

மாற்றப்படும் யாதும் ஒருநாள்
அதுவரை உணவை  வணங்கி
ஒருவருக்கொருவர் பகிர்ந்துண்போம்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

விண்ணைத் தொட்டு எழுவோம்




குட்டக்குட்டக் குனிந்தோம்
தட்டத்தட்டத் தணிந்தோம்
கட்டுப்பட்டுக் கிடந்தோம் அவமானம்

விண்ணைத் தொட்டு எழுவோம்
வீறுகொண்டு அலைவோம்
மீண்டும் மீட்டு எடுப்போம் இனமானம்

வீரம் எம் வித்தாகும்
மானம் எம் சொத்தாகும்
வேர்வை நீர் முத்தாகும் 
எம் மண்ணில்

ஈட்டி கண்டு அஞ்சாது
ஈனம் கொண்டு துஞ்சாது
வீசும் கனல் தீராது 
எம் கண்ணில்

இனியும் இனியும் பொறுப்போம்
எனநீ நினைத்தால் அறுப்போம்
எரியும் நெருப்பாய் இருப்போம்
எதிரே நின்றால் அழிப்போம்

நமது சுதந்திரம்


அடிமைக் காற்றின் வெப்பம் ஏறி
மூச்சுக் குழல்கள் கொதித்துக் குமைய
வெடித்து எழுந்த உரிமைப் போரில்
துடித்து மடிந்த உயிர்கள் எத்தனை

விடுதலை வேள்வியில் உதிரம் ஊற்றி
நாம் பெற்ற சுதந்திரம் நன்றாய் அறிவோம்
கொடுமைச் சிறையில் வலிகள்
தாங்கி
நாம் பெற்ற சுதந்திரம் நன்றாய் அறிவோம்.

வெள்ளைக் காரனைத் துரத்தி அடித்து
கொள்ளைக் காரனுக்கு ஆரத்தி
எடுத்து
எல்லா வளமும் களவு போக
அய்யோ பாவம் ஆனந்த சுதந்திரம்

உலக நாடுகளின் சந்தை ஆனோம்
திணிப்பை ஏற்கும் ஜந்தாய் ஆனோம்
பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பித்
தின்னும்
பொருளாதார விருந்தாய் ஆனோம்

இழிநிலை மாறும் 
இளைய தலைமுறை மாற்றும்
தன்னெழுச்சியாக 
தன்னிறைவடையும்
அன்றைக்கு மிளிரும்
நாம் பெற்ற சுதந்திரம் !

   




வியாழன், 4 அக்டோபர், 2018

புறா எச்சம்


புழுதிவாரி தூற்றும் 
நபர்களை புறம் தள்ளு
உயர்ந்த கோபுரங்களில்
புறாக்கள் எச்சமிடும்.

மானுட அன்பு





சாதி இரண்டொழிய வேறில்லை
என்னும் பேச்சுக்கே இடமில்லை
உயிர்களிடத்திலே பிரிவில்லை
இதை மறந்துபோனதால்தான் தொல்லை

பாகுபாடுகள் நலமில்லை - அதை
பாதுகாப்பதால் பலனில்லை
சாதிவிஷமெனும் திசைச்சொல்லை
தீர்த்துக்கட்டுவோம் முதல்வேலை

ஓட்டைப் பிரிக்கவோ சாதிமதம்
நாட்டைப் பறிக்கவோ சாதிமதம்
வேட்டையாடவோ சாதிமதம் -அதை
வேடிக்கைப் பார்க்குமோ மனிதஇனம்

பாதியில் வந்தவையெல்லாம்-நம்
பாதையை மாற்றுவதா
ஆதிக்க நஞ்சையூட்டி - கொடும்
போதையை ஏற்றுவதா

வேறு வேறு என்று நம்மை
கூறுபோட்ட கூற்றம் - தனை
வேரறுக்க வேண்டும் நாம்
வீரத்தமிழ்க் கூட்டம்

சாதி இரண்டொழிய வேறில்லை
என்ற வாதமும் மாறும் நிலை
பேதம் என்பதை ஏற்பதில்லை
இனி
மானுட அன்பே உச்சநிலை.
















சிந்தனை செய்


சிந்தனை செய் மனமே 
தொடக்கம் என்ன
முடிவென்ன 
இப்போதிருக்கும் இடமென்ன
சிந்தனை செய் மனமே

பயணத்தின் இலக்கென்ன
பாதைகளில் இடையூறென்ன
சிந்தனை செய் மனமே

மனிதர்க்கு ஆயிரம் பிரச்சினை
முடித்து வைக்கும் தீர்வினை
சிந்தனை செய் மனமே

புன்னகைக்கும் உதடுகள் தாம்
புரட்சி முழக்கமும் உச்சரிக்கும்
சிந்தனை செய் மனமே

அகிலத்தை மாற்ற
ஆயுதம் வேண்டாம்
காகிதம் போதும் 
சிந்தனை செய் மனமே

புதிய புதிய ஆற்றலைக் கண்டெடுக்க
புதிய புதிய மாற்றங்கள் வென்றெடுக்க
சிந்தனை செய் மனமே

 ஒருவருக்கொருவர் அன்பை     தோற்றுவிக்க
மானுட குலத்தின் மாண்பை
மீட்டெடுக்க
சிந்தனை செய் மனமே

கல்வியைப் பகுத்தறிவோம்
கடமையைப் பகுத்தறிவோம்
உரிமையைப் பகுத்தறிவோம்
உணர்ச்சியைப் பகுத்தறிவோம்

காலத்தைப் பகுத்தறிவோம்
ஞாலத்தைப் பகுத்தறிவோம்
யாவையும் பகுத்தறிவோம்

சிந்தனை செய் மனமே
சரித்திரம் உன் வசமே










தடைகளைத் தகர்


        

புதிய விடியலை நோக்கிப் புறப்படு
இடிக்கும் வானம் மேளம் ஒலிக்க

காட்டுப் பாதையா கவலை இல்லை
ஓடும் நதியே பயணம் தொடர்க

ஓய்வு என்பது பூமிக்கு இல்லை
சுற்றும் காற்றெனச் சுற்றிச் சுழல்க

தேய்ந்து போய்விட செருப்பா யாமும்
பாயும் நெருப்பாய் பற்றிப் படர்க

நேற்று என்பது சரித்திரம் ஆகும்
இன்று என்பதைச் சிறப்பாய் மாற்று

தாவர இனமும் வேர்களாய் நகரும்
மானுட இனமோ வேர்வையால் உயரும்

துணிந்து நின்றபின் உனக்குயார் நிகர்
எதிர்த்து மோதிடும் தடைகளைத் தகர்

திங்கள், 1 அக்டோபர், 2018

மகாத்மா




இனவெறியால் ஏளனப்படுத்தப்பட்ட மனிதன்
இனவெறியையே ஏளனப்படுத்திய மனிதன்

ஆயுதங்களுக்கு அடிபணியாத அகிம்சை
ஆயுதக்காரனையே அடிபணியவைத்த அகிம்சை 

இலட்சரூபாய் சட்டை அணியத்தெரியாத அரசியல்வாதி
இலட்சியத்திற்காக சட்டையே
அணியாத அரசியல்வாதி 

மதவெறியை சுட்டெரித்த ஆத்மா
மதவெறியால் சுடப்பட்ட மகாத்மா

எளிமையாக தெரிந்த இணையற்ற வலிமை
வலிமையாக திரிந்த உச்சகட்ட எளிமை

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி !

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

உழைப்பின் ஓசை


நடைமேடையோர ஆர்மோனியப் பாடலை
நசுக்கிச் செல்லும் ரயில் சத்தமென
வாழ்வின்  சோகராகங்களைச்
சாப்பிட்டுப் போகட்டும்
உழைப்பின் பேரிரைச்சல்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

ஆயுதன்


ஆழ்மனக்கடலில் 
அடிக்கடி  நீந்து
மௌனம் உன்னோடு நீயே 
பேசிடும்  உள்மொழி 

உன்னை நீயே
குறைத்துக் கொள்ளாதே
வெற்று பிம்பங்களால்
நிறைத்துக் கொள்ளாதே

சரியாக செய்தால்
பன்றி மேய்த்தல்
கார்ப்பரேட் தொழிலே

நீ 
ஆற்றில் எறியப்படுவது 
நீச்சல் பழக
ரோட்டில் எறியப்படுவது 
ஓட்டம் பழக 

நீ 
எல்லையற்றவன்
வேலிகளை வெட்டியெறி
நீ
ஏதுமற்றவன்
கவலைகளை விட்டு ஒழி

நீ சக்தி பெற்றவன்
சாதிக்க காட்டு வெறி

கனவுகளை
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு
அழிக்காதே
செந்நீர் விட்டு செந்நீர் விட்டு
சிறப்பாக வளர்த்தெடு

நூறாண்டு மரங்களை
முறித்துப்போடும் புயல் காற்றால்
ஒருநாணலைக்கூட 
ஒடிக்க முடியாது 

பணி பயந்துவிடாதே 
குனி படுத்துவிடாதே

உள்ளம் என்பதை
உலர்த்திக் கொண்டேயிரு
ஈரப்பதத்தில் பூஞ்சைகள் 
முளைக்கும்

காலம் உன்னை காயப்படுத்தும்
காயங்கள் உன்னை ஆழப்படுத்தும்

மூச்சிருக்கும்வரை என்பது
உடலுக்கு மட்டும்தான்- உலகில்
பேச்சிருக்கும்வரை உன்
பேரிருக்கும்
புகழ்வெளி புகு 

துல்லியமாகக் கணக்கிடும்
துல்லியமாகக் செயல்படும்
கணிப்பொறி நீ

ஏவுகணைகள் தாங்கிய
ஆயுதன் நீ
ஏமாற்றங்கள் தாங்கிட
நடுக்கம் ஏன்

அடிக்கடி வளையும்
நதிகள்
அதிக தூரம் பயணிக்கும்

நட்பை வீணாக்காதே
நட்பால் வீணாகாதே

பொருளை வைத்து
மனிதரை மதிப்பிடாதே

வானிலை
வாழ்நிலை
இரண்டும் ஒன்றுதான்
எப்போதும் மாறக்கூடும்

நிலையற்றவை எல்லாம்
எனினும்
நிலையானவன் நீயென நம்பு
நிலைகுலையா நெஞ்சம் கொள்

எதிர்கொள்ள துணிவிருந்தால்
எதிர்ப்பைப் பற்றி அச்சமில்லை
எதற்கென பணிந்துவிட்டால்
எதுவும் இங்கே மிச்சமில்லை

துணிந்து நில்



செவ்வாய், 11 செப்டம்பர், 2018

பாரதியார்



காக்கைச் சிறகிற்கும் 
கவிதை நிறம் தீட்டியவன்

காற்று வெளியிடையில்
காதல் ரசம் பூசியவன்

சாதிச் செருக்கின்
முகத்தில் கரி பூசியவன்

நீதி உயர்ந்த மதிப்
பேரொளி வீசியவன்

அச்சத்தை துச்சமென
தூசியென ஏசியவன்

உச்சத்தில் தமிழ்மொழியை
ஏற்றி வைத்துப் பேசியவன்

விடுதலையை உயிர் மூச்சாய் 
பெருங்குரலில் பாடியவன்

கொடும்வறுமை பெரும்பேயை
கடுஞ்சொல்லில் சாடியவன்

ஆங்கொரு காட்டின் 
அக்கினிக்குஞ்சு - அவன்

மானுடம் காக்கத்
துடித்தவோர் நெஞ்சு.

சனி, 8 செப்டம்பர், 2018

அச்சமின்றி திரி


நாலுசுவர் என்பது சிறைச்சாலை வெளியே வா
நடுரோடும் பாடசாலை
மனிதர்கள் உலவும்பாடங்கள்

பேசாமலே வளரும்பகைமை
பேச்சினால் உடைப்போம் சுவரை

சிகை பகை 
அடிக்கடி சரிசெய்

தன்னை நம்பாமல்
தன்னை நம்புபவனை
நம்பாது கடவுள்

தொலைவில் புள்ளியாய் தெரியும்
ஒற்றை வெளிச்சம் அருகே செல்லச்செல்ல ஓங்கிவளரும்

தொலைவை குறைத்துவிடு
துயரம் தொலைத்துவிடு

விடாமல் பெய்கிற 
அடைமழை -முயற்சி

அடர்ந்த காட்டில் உலவும்
கொடிய மிருகங்கள்கண்டதுண்டா  
அவைமனதில்  உலவும்
கெட்டகுணங்களின் 
உயிர்வடிவங்கள்

தீய பழக்கங்களைக் கொன்றுவிடு
இன்றேல்  அவைஉன்னை தின்றுவிடும்

போதைக்கு முதல் பலி 
மரியாதை - உன்னை நீயே சிறுமைப்படுத்த ஊற்றிக்குடி

தனிமை உன்னை
தனிமைப்படுத்தி விடும்
கூடுமானவரை கூடிப்பழகு

காட்டுவெள்ளமும்
உணர்ச்சி வெள்ளமும்
பாதுகாப்பானவை அல்ல

நெற்றியில் நீர் வெகுமானம்
கண்களில் நீர் அவமானம்

வண்டியைவிட   சைக்கிளை நம்பு
சைக்கிளைவிட  கால்களை நம்பு

காற்றுக்கு சிறகுகள் தேவையில்லை
அறிவுக்கு அறிவுரைதேவையில்லை

காலை எழுந்தவுடன் தண்ணீரில் குளி
மாலை வரும்வரை வேர்வையில் குளி

ஊமையை பேசவைக்க வேண்டாம்
சிந்திக்க வைத்தாலே போதும்

முடிந்தவரை உண்மைபேசு 
முடியாதபொழுதில் ஊமையாகு

யாரும் இங்கே நல்லவனில்லை
அதனால் நீயும் கெட்டவனில்லை

அடிக்கடி உன்னைநீயே
ஆராய்ந்துகொள்

நீ எனும் நீரில் எத்தனை கிருமிகள்
உன் ஆய்வுக்கூடம் அறிந்து சொல்லட்டும் 
ஆகாதவை அகற்ற மருந்து கொள்ளட்டும்

இறகுகள் உதிர்வதால்பறவைக்கு சேதமில்லை
இழப்புகள் நேர்வதால்உழைப்புக்கும் ஊனமில்லை

அடக்கம் கீழிருந்து மேல்
ஆணவம் மேலிருந்து கீழ்

மேடை கிடைத்தால் பேசு
பேனா கிடைத்தால் எழுது
புத்தகம் கிடைத்தால் வாசி
மெத்தை கிடைத்தால் தூங்காதே

அடுத்த  கணமே 
அழியும் உலகம் என்றாலும் 
அச்சமின்றி திரி
ஆலையில் பிழியப்படும்
கரும்பும் உழைப்பும் 
கலந்தே இனிக்கிறது .

பாயும் நதி

அனுதினம் எண்ணம் பின்னால் இழுக்கும் 
தனுவெனும் செயலே வீச்சு.  


ஆயிரம் தடைகள் அணையினை போடும்
பாயும் நதியே உடை. 


இளமைப் புரவி விரைந்திடும் வேகம்
வளமை பெறவே உழை. 


ஈடில்லை எவரும் என்றெண்ணு என்றாலும்
கேடில்லா கருவம் கொள். 


உதைத்தால் அழவா பிறந்தாய் உலகம்
உதைத்தால் அதையே உதை. 


ஊமைக் கனவும் ஒருநாள் கதைக்கும்
சாமைக் கதிராகச் சிரி. 


எரியும் நெருப்பை காற்றே 
பெருக்கும்
கனன்று கனன்று எழு


ஏக்கம் தயக்கம் மனதில்
அகற்று
ஏந்தித் திரிவாய் இலக்கு


ஒடுங்கியே கிடந்தால் ஓய்வும் சலிப்பு
வெடுக்கென எழுவாய் சிறப்பு.