Powered By Blogger

திங்கள், 15 அக்டோபர், 2018

உணவைப் பகிர்ந்துண்போம்



இன்னும் ஒழிக்க முடியவில்லை
உலகில் வறுமையை 
விண்வெளியைக் கோலோச்சும்
விஞ்ஞானம் வளர்ந்த பின்னும்.

குடலோடு ஒட்டிய வயிறு ஒருபிடி
சோற்றுக்காக மூச்சுதிணறும்
உடலைவிட்டு பிரியாமல் உயிரோ
வேதனையை ஊதிப்பெருக்கும்.

இல்லாதவன் கண்ணில்
ஏக்கப்பார்வை
இருப்பவன் கண்ணில்
ஏளனப்பார்வை.

பசி 
ஆயுதப் போருக்கும் வழிவகுக்கும்
ஆயுதமில்லாமலும் போர் தொடுக்கும்.

உலகின் தவிர்க்க முடியாத
அடிப்படைத் தேவை உணவு
உலகின் மிகப்பெரிய 
வியாபாரப் பொருள் உணவு.

ஆதிமனிதனுக்கு பொதுவாக
எளிதாகக் கிடைத்த அனைத்தும்
நாகரீகமனிதன் விலைகொடுத்து வாங்கும்
சந்தைப்பொருளாகி அவனையே
சந்தியில் தள்ளும்.

எல்லாம் இழந்தவன் உணவுக்குக்கூட 
அலைகிறான் அகதியென.

மாற்றப்படும் யாதும் ஒருநாள்
அதுவரை உணவை  வணங்கி
ஒருவருக்கொருவர் பகிர்ந்துண்போம்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

விண்ணைத் தொட்டு எழுவோம்




குட்டக்குட்டக் குனிந்தோம்
தட்டத்தட்டத் தணிந்தோம்
கட்டுப்பட்டுக் கிடந்தோம் அவமானம்

விண்ணைத் தொட்டு எழுவோம்
வீறுகொண்டு அலைவோம்
மீண்டும் மீட்டு எடுப்போம் இனமானம்

வீரம் எம் வித்தாகும்
மானம் எம் சொத்தாகும்
வேர்வை நீர் முத்தாகும் 
எம் மண்ணில்

ஈட்டி கண்டு அஞ்சாது
ஈனம் கொண்டு துஞ்சாது
வீசும் கனல் தீராது 
எம் கண்ணில்

இனியும் இனியும் பொறுப்போம்
எனநீ நினைத்தால் அறுப்போம்
எரியும் நெருப்பாய் இருப்போம்
எதிரே நின்றால் அழிப்போம்

நமது சுதந்திரம்


அடிமைக் காற்றின் வெப்பம் ஏறி
மூச்சுக் குழல்கள் கொதித்துக் குமைய
வெடித்து எழுந்த உரிமைப் போரில்
துடித்து மடிந்த உயிர்கள் எத்தனை

விடுதலை வேள்வியில் உதிரம் ஊற்றி
நாம் பெற்ற சுதந்திரம் நன்றாய் அறிவோம்
கொடுமைச் சிறையில் வலிகள்
தாங்கி
நாம் பெற்ற சுதந்திரம் நன்றாய் அறிவோம்.

வெள்ளைக் காரனைத் துரத்தி அடித்து
கொள்ளைக் காரனுக்கு ஆரத்தி
எடுத்து
எல்லா வளமும் களவு போக
அய்யோ பாவம் ஆனந்த சுதந்திரம்

உலக நாடுகளின் சந்தை ஆனோம்
திணிப்பை ஏற்கும் ஜந்தாய் ஆனோம்
பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பித்
தின்னும்
பொருளாதார விருந்தாய் ஆனோம்

இழிநிலை மாறும் 
இளைய தலைமுறை மாற்றும்
தன்னெழுச்சியாக 
தன்னிறைவடையும்
அன்றைக்கு மிளிரும்
நாம் பெற்ற சுதந்திரம் !

   




வியாழன், 4 அக்டோபர், 2018

புறா எச்சம்


புழுதிவாரி தூற்றும் 
நபர்களை புறம் தள்ளு
உயர்ந்த கோபுரங்களில்
புறாக்கள் எச்சமிடும்.

மானுட அன்பு





சாதி இரண்டொழிய வேறில்லை
என்னும் பேச்சுக்கே இடமில்லை
உயிர்களிடத்திலே பிரிவில்லை
இதை மறந்துபோனதால்தான் தொல்லை

பாகுபாடுகள் நலமில்லை - அதை
பாதுகாப்பதால் பலனில்லை
சாதிவிஷமெனும் திசைச்சொல்லை
தீர்த்துக்கட்டுவோம் முதல்வேலை

ஓட்டைப் பிரிக்கவோ சாதிமதம்
நாட்டைப் பறிக்கவோ சாதிமதம்
வேட்டையாடவோ சாதிமதம் -அதை
வேடிக்கைப் பார்க்குமோ மனிதஇனம்

பாதியில் வந்தவையெல்லாம்-நம்
பாதையை மாற்றுவதா
ஆதிக்க நஞ்சையூட்டி - கொடும்
போதையை ஏற்றுவதா

வேறு வேறு என்று நம்மை
கூறுபோட்ட கூற்றம் - தனை
வேரறுக்க வேண்டும் நாம்
வீரத்தமிழ்க் கூட்டம்

சாதி இரண்டொழிய வேறில்லை
என்ற வாதமும் மாறும் நிலை
பேதம் என்பதை ஏற்பதில்லை
இனி
மானுட அன்பே உச்சநிலை.
















சிந்தனை செய்


சிந்தனை செய் மனமே 
தொடக்கம் என்ன
முடிவென்ன 
இப்போதிருக்கும் இடமென்ன
சிந்தனை செய் மனமே

பயணத்தின் இலக்கென்ன
பாதைகளில் இடையூறென்ன
சிந்தனை செய் மனமே

மனிதர்க்கு ஆயிரம் பிரச்சினை
முடித்து வைக்கும் தீர்வினை
சிந்தனை செய் மனமே

புன்னகைக்கும் உதடுகள் தாம்
புரட்சி முழக்கமும் உச்சரிக்கும்
சிந்தனை செய் மனமே

அகிலத்தை மாற்ற
ஆயுதம் வேண்டாம்
காகிதம் போதும் 
சிந்தனை செய் மனமே

புதிய புதிய ஆற்றலைக் கண்டெடுக்க
புதிய புதிய மாற்றங்கள் வென்றெடுக்க
சிந்தனை செய் மனமே

 ஒருவருக்கொருவர் அன்பை     தோற்றுவிக்க
மானுட குலத்தின் மாண்பை
மீட்டெடுக்க
சிந்தனை செய் மனமே

கல்வியைப் பகுத்தறிவோம்
கடமையைப் பகுத்தறிவோம்
உரிமையைப் பகுத்தறிவோம்
உணர்ச்சியைப் பகுத்தறிவோம்

காலத்தைப் பகுத்தறிவோம்
ஞாலத்தைப் பகுத்தறிவோம்
யாவையும் பகுத்தறிவோம்

சிந்தனை செய் மனமே
சரித்திரம் உன் வசமே










தடைகளைத் தகர்


        

புதிய விடியலை நோக்கிப் புறப்படு
இடிக்கும் வானம் மேளம் ஒலிக்க

காட்டுப் பாதையா கவலை இல்லை
ஓடும் நதியே பயணம் தொடர்க

ஓய்வு என்பது பூமிக்கு இல்லை
சுற்றும் காற்றெனச் சுற்றிச் சுழல்க

தேய்ந்து போய்விட செருப்பா யாமும்
பாயும் நெருப்பாய் பற்றிப் படர்க

நேற்று என்பது சரித்திரம் ஆகும்
இன்று என்பதைச் சிறப்பாய் மாற்று

தாவர இனமும் வேர்களாய் நகரும்
மானுட இனமோ வேர்வையால் உயரும்

துணிந்து நின்றபின் உனக்குயார் நிகர்
எதிர்த்து மோதிடும் தடைகளைத் தகர்

திங்கள், 1 அக்டோபர், 2018

மகாத்மா




இனவெறியால் ஏளனப்படுத்தப்பட்ட மனிதன்
இனவெறியையே ஏளனப்படுத்திய மனிதன்

ஆயுதங்களுக்கு அடிபணியாத அகிம்சை
ஆயுதக்காரனையே அடிபணியவைத்த அகிம்சை 

இலட்சரூபாய் சட்டை அணியத்தெரியாத அரசியல்வாதி
இலட்சியத்திற்காக சட்டையே
அணியாத அரசியல்வாதி 

மதவெறியை சுட்டெரித்த ஆத்மா
மதவெறியால் சுடப்பட்ட மகாத்மா

எளிமையாக தெரிந்த இணையற்ற வலிமை
வலிமையாக திரிந்த உச்சகட்ட எளிமை

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி !