தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே
முக்கடல் கூடி சங்கமித்து
முப்பொழுதும் உனைத்
தொழுதிடுமே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே
காவிரி வைகை நொய்யலென
தாமிரபரணி பவானியென
தென்பெண்ணை அமராவதியாக
நதியாரங்கள் மின்னும் ஒளிநாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரும்
கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரும்
உயிர்ச்சூழல் காத்து உயர்ந்து நிற்கும்
இயற்கை போர்த்திய எழில் நாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே
பச்சை வயலின் பயிர் செழிப்பில்
காலை வெயிலின் நாட்டியங்கள்
ஒளிக்கீற்றாய் மோதி விளையாடும்
பொன்னெழில் பூத்த வளநாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே
தொழிற்சாலை சுழலும் சக்கரங்கள்
ஒலிதானே உழைப்பின் மந்திரங்கள்
ஒலிக்கும் தினமும் உனைப் போற்றி
உழைக்கும் கரங்கள் தனைக் கூட்டி
பொருளாதாரத் தரு நாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே
சேரனும் சோழனும் பாண்டியனும்
வீரத்தை விளைத்த பெருநிலமே
கடையெழு வள்ளல்கள் கொடைகொடுத்து
வாரிக் குவித்த புகழ் நிலமே
வீரமும் ஈகமும் உயர் நாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே
இலக்கிய நயங்கள் தேனூறும்
உலகியல் நெறிகள் வானேறும்
சிறப்புகள் மிகுந்த மொழியாகும்
பைந்தமிழ் துளிர்த்த நிலமாகும்
செந்தமிழ் தேன்மொழி திகழ் நாடே
தாயே தமிழ் நாடே
நீயே உயிர் கூடே
பாரில் புகழ் நாடே
நேசம் சுழல் நாடே
ஓங்குக நின்புகழ் உயர்வோடே
வாழிய செந்தமிழ் திருநாடே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக